பகலான இரவு ....இரவான பகல்

on Thursday, March 18, 2010




எங்கள் உலகத்தில்


சந்திரனே சூரியன் ...
சூரியனே சந்திரன் ...


இது வேற்று கிரகம் இல்லை ....
இது இரவு வேலையின் தொல்லை ..


மாலை நேரங்கள் காலை ஆனது ....
இரவு நேரங்கள் மதியம் ஆனது ....
காலை நேரங்கள் இரவு ஆனது ....
எங்கள் உடம்பு துவண்டே போனது .

ஒரு "டீன்" கால பைத்தியம்

on Thursday, March 4, 2010



ஒரு "டீன்" கால பைத்தியம்

அன்று சக்தி பள்ளியில் இருந்து சீக்கிரம் வந்து விட்டாள். மனம் பந்து சத்தத்திற்காக காத்துக் கொண்டு இருந்தது . காரணம், கீழ் வீட்டு சிவா இன்னும் பந்து அடிக்க தொடங்கவில்லை. சிவா, கீழ் வீட்டில் வசிக்கும் எட்டாம் வகுப்பு மாணவன், அவனுக்கு கிரிக்கெட் என்றால் பிரியம் அவன் தினமும் பள்ளியிலிருந்து வந்தபின் தானாக பந்து விளையாடுவான். இருவருக்கும் இருவர் மேல் கொஞ்சம் பைத்தியம். சக்தி வேறுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி. தினமும், சிவா பந்து தட்டும் சத்தம் கேட்டவுடன் சக்தி குடு குடுவென்று ஓடி வந்து வீடு முற்றத்தில் இருந்து கீழேப் பார்ப்பாள். சிவாவும் மேல பார்க்க " உன்னைப் பார்த்தப் பின்பு நான்...... நானாக இல்லையே " என்று பாடல் ஒலிக்கும். பின்னர், "இடி இடிக்குது ....இடி இடிக்குது " என்ற ஒலியுடன் சிவாவின் அம்மா வந்து படிக்காமல் பந்து தட்டும் சிவாவை அடிப்பாள். சக்தி முன்னால் அடி வாங்கும் அவமானம் தாங்காமல் , கீழே குனிந்துக் கொண்டு "உன்குத்தமா என்குத்தமா....." என்ற பாடலை பாடுவான். பின்னர், சக்தியும் எதையும் பார்க்காதது போல் வீட்டுக்குள் ஓடி விடுவாள். சக்திக்கும் அப்ப அப்ப இதுபோல் அவமானம் நடக்கும். சக்தி வீட்டு சமையல் அறையில் இருந்து எது பேசினாலும், சிவா வீட்டு சமையல் அறைக்கு நன்றாகக் கேட்கும். சக்தி படிக்காமல் இருந்தால் , சமையல் அறையில் இருந்து வேணுமென்றே சிவா வீட்டுக்குக் கேட்கும் படி "அப்படி போடு ..போடு ..." ஸ்டைலில் அடிவிழும். அம்மாவை வேறு அறையில் சென்று அடிக்கும் படிக் கெஞ்சுவாள்:-). இப்படியே நாட்கள் சென்றன. ஒரு நாள் ஒரு செய்தி இடி போல் சக்தியைத் தாக்கியது. அந்த செய்தி என்னவென்றால், சிவா சக்தியை விட இரு நாள் இளையவன் என்று . "என்ன கொடுமை சரவணா "!!! சக்திக்கு இப்படி ஒரு சோதனை. இதை நினைத்து நினைத்து சக்தி இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறாள் .....தன் எட்டாம் வகுப்பு மகளின் செயலை பார்த்துக் கொண்டே.......
இந்த கதையை போல் ஒவ்வொரு வாழ்விழும் ஒவ்வொரு இனிமையான பைத்தியங்கள் இருக்கும்.
இது ஒவ்வொரு தலைமுறையிலும் தொடரும் ......:)

-Kolundhu

படித்து ரசித்தது !!!

on Tuesday, February 23, 2010

கொஞ்சம் யோசியுங்கள் நண்பர்களே !!!!

on Friday, February 5, 2010

''ருநாள் வேலை இல்லாம இருந்தாக்கூட பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு.''
''
ஒரு சண்டே கிடைச்சா நிம்மதியாத் தூங்கலாம்னு தோணுது. ஆனா, மத்தியானத்துக்கு மேல என்ன செய்யுறதுன்னே தெரியலை!''
வேலை
இல்லாத நேரங்களில், வழக்கமான பணிகளில் இருந்து ஒதுங்கியிருக்கும் நாட்களில் 'என்ன செய்வது என்றே தெரியவில்லை' என்பது பலருக்கும் இருக்கும் பிரச்னை. இன்னும் சிலருக்குத் தூங்கி எழுந்ததுமே படபடப்பாக இருக்கும். 'அடடா, இவ்வளவு நேரம் தூங்கிட்டேனே... இந்த நேரத்துக்கு அதைச் செய்திருக்கலாமே, இதைச் செய்திருக்கலாமே' என்று கவலை வரும்.

நண்பனோடு போனில் பேசும்போது, டி.வி.பார்க்கும் போது, சினிமாவுக்குப் போகும்போது, உறவினர்வீட்டுக் கல்யாணத்தில் உட்கார்ந்திருக்கும்போது, பஸ்சுக்காகக் காத்திருக்கும்போது... இப்படி நிறைய நேரங்களில் மனசுக்குள் ஓரமாக ஒரு கவலை வரும். 'நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டு இருக்கோமோ?'

இந்தப் பதற்றம் ஒரு வகையில் நியாயமானதுதான். அதற்குக் காரணமும் உண்டு. வழக்கமாகச் செய்யவேண்டிய வேலைகளுக்கு என்று ஒரு செயல் திட்டம் இருப்பதைப்போல, நமக்குப் பிடித்தமான விஷயங்களைத் தேர்வுசெய்து, அதனைத் தொடர்ந்து செய்துகொண்டு இருக்க ஒரு திட்டம் இருப்பது இல்லை.படிப்பது, பள்ளிக்கூடம் போவது, கல்லூரிக்குப் போவது, வேலைக்குப் போவது, டியூஷன் போவது... இவை தவிர, தனக்குப் பிடித்தமான விஷயம் என்ற ஒன்றைப் பலரும் அடையாளம் கண்டுகொள்வது இல்லை.

உங்களுக்கே உங்களுக்கு என்று பிடித்த விஷயம் எது? கொஞ்சம் ஆழமாக யோசியுங்கள். வெகுசிலரைத் தவிர, பலரும் அதை இன்னும் கண்டறியவே இல்லை என்பதுதான் உண்மை. பிடித்த பொழுதுபோக்கு...ஞாபகத்தில் இருக்கலாம். வழக்கமான வேலைகளைத் தவிர, பிடித்த இன்னொரு விஷயம் எது? உதட்டைப் பிதுக்கி 'ம்ஹ§ம்... ஒண்ணும் தோணலை' என்பதேபலரது பதிலாக இருக்கும்.

மனித மனங்கள் பற்றிய ஆழமான ஆய்வு ஒன்று... 'தனக்குப் பிடித்தமான விஷயங்களைக் கண்டறிந்து அதனைச் செய்யாமல் இருப்பவர்கள், வழக்கமாகச்செய்யும் வேலைகளையும் கடனே என்று செய்கிறார்கள்' என்கிறது.அது தேடித் தேடி ஸ்டாம்ப் சேகரிப்பதாக இருக்கலாம்; பழைய நாணயங்களைப் பத்திரப்படுத்துவதாக இருக்கலாம்; ஓவியம், கவிதை, இசை, மலையேறுதல், கிராமங்களுக்குப் பயணித்தல், டென்னிஸ் விளையாடுதல்... இப்படி ஏதோ ஒன்று. ஆனால், அது உங்களுக்காக, உங்கள் சுய சந்தோஷத்துக்காகச் செய்கிற விசயமாக இருக்க வேண்டும்.எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மனத் திருப்தி, சுயசந்தோசம் என்கிற அடிப்படையில் ஏதாவது ஒரு விசயத்தில் ஈடுபாட்டோடு இருக்கப் பழகுவது இன் றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் மனசை லேசாக்குவதற்கு அவசியம்.

உங்களை மறந்து, உங்களை உங்களுக்குள் தேடுகிற லயிப்பும் வாஞ்சையும் அதற்குள் இருக்க வேண்டும். இப்போது இன்னமும் அழகாக யோசியுங்கள். அப்படி ஒரு விஷயம் இருக்கிறதா உங்களிடம்?

கல்வியின் நோக்கம் ஒன்றாக இருந்தாலும், இன்றைக்கு யதார்த்தம் வேறாகத்தான் இருக்கிறது. பள்ளிக் கூடத்தில் படிப்பது, கல்லூரியில் சேர; கல்லூரியில் சேருவது, வேலையைப் பெற; வேலையில் இருப்பது, கல்யாணம் செய்ய; கல்யாணம் பண்ணுவது, குடும்பம் தழைக்க... இப்படி ஒவ்வொரு காரியமும் ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் நடக்கிறது. இதில் உங்களுக்கே உங்களுக்கு என்று வாழ்ந்தது எப்போது?

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயண மூர்த்தி, தனது ஊழியர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி யிருந்தார். 'இன்றைய இளைய தலைமுறை வேலையே வாழ்க்கை என்று வாழ்கிறது. 'வாழ்தல்' என்பது வேலை பார்ப்பது மட்டுமல்ல' என்று அழகாகச் சொல்லியிருந்தார் அவர்.

சென்னையின் மிகப் பெரிய கட்டடங்களில் நள்ளிரவுக்குப் பிறகும், பணி நேரத்துக்குப் பிறகும் விளக்குகள் எரிந்துகொண்டு இருக்கின்றன. இளைஞர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளிலும் இவர்கள் பணி தொடர்கிறது. வீட்டில் இருப்பதற்குப் பதிலாக ஆபீசுக்குப் போனால் ஏதாவது செய்யலாமே என்று, எப்போதும் வேலைக்குள்ளேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். காரணம், வேலையைத் தவிர செய்வதற்கு என்று வேறு எதுவும் அவர்களுக்குத் தெரியாது. அலுவலகம், வேலை இதைச் சுற்றியே இவர்களின் வாழ்க்கை நடக்கிறது. 'இரண்டு நாள் லீவில் என்னதான் செய்வது? அதான் ஆபீசுக்கு வந்துடுறோம். விடுமுறை நாளில் இன்னமும் ரிலாக்ஸ்டாக வேலை பார்க்கலாம், தெரியுமா!' என்று விளக்கமும் தருவார்கள்.

நாராயணமூர்த்தி தொடர்கிறார்... 'உங்கள் வேலை நேரத்துக்குள் உங்கள் வேலைகளை முடித்துக்கொண்டு ஏனைய நேரத்தை உங்களுக்காகச் செலவிடுங்கள். இசை கற்றுக்கொள்ளுங்கள். புதிதாக எதையாவது பரீட்சித்துப்பாருங்கள். உங்களுக்குப் பிடித்த விசயம் எது என்று கண்டறிந்து அதில் லயித்திருங்கள். அலுவலகத்தையே சுற்றிக்கொண்டு இருக்காதீர்கள்!'

உண்மைதான். இன்றைக்கும் ரிட்டையர்டு ஆகி, வீட்டுக்கு வரும் பெரியவர்களுக்கு அடுத்து என்னசெய்வது என்றே தெரியாமல் போனதற்கு இதுதான் காரணம். 'பிடித்த புத்தகங்களை எல்லாம் படிக்கப் போகிறேன். பேரன், பேத்திகளுடன் சேர்ந்து விளையாடப்போகிறேன். அதிகாலையில் எழுந்து ராகவேந்திரா கோயிலில்பாடப் போகிறேன். மனைவியைக் கூட்டிக்கொண்டு, கோயில் குளமெல்லாம் சுத்தப்போகிறேன். கிராமத்துக்குப் போய் அமைதியாகத் தியானம், யோகா என்று வாழப்போகிறேன்' என ஆயிரம் விஷயங்களை ரிட்டையர்டு ஆகப்போகும் காலத்தில் பலர் சொல்வது உண்டு. ஆனால், இதில் ஒன்றைக்கூடப் பெரும்பாலும் செய்ய முடிவது இல்லை. காரணம், இது எதையுமே இதற்கு முன் அவர்கள் செய்தது இல்லை.

போன தலைமுறைக்காவது ரிட்டையர்ட்மென்ட்டுக்குப் பிறகுதான் இந்தப் பிரச்னை. இன்றைய தலைமுறைக்கோ ஒரு விடுமுறை நாளைக்கூட வேலை இல்லாமல் கழிப்பதற்கான விருப்பத் திட்டம் எதுவும் இல்லை.

நம்மில் பெரும்பாலானோருக்கு வேலை அல்லாமல் செய்யத் தெரிந்த விஷயங்கள்மூன்று தான். ஒன்று, டி.வி. பார்ப்பது; இரண்டாவது, புத்தகம் படிப்பது; மூன்றாவது, நண்பர்களிடம் பேசுவது. இதைத் தாண்டி தனித்துவமாக பிடித்த விஷயம் என்று ஒன்றில்லை.

இப்படி, பிடித்த விஷயம் என்று ஒன்று இல்லாமல் போனதால்தான், நம் குடும்பங்களுக்குள்ளே பேச்சுக்கள் குறைந்துபோயின. சின்ன வயதில் அம்மா, அப்பாவிடம் எல்லாவற்றையும் சொல்வோம். அதற்குப் பிறகு, தேர்வுசெய்து சொல்ல ஆரம்பித்தோம். வயது அதிகரிக்க அதிகரிக்க, 'அம்மாவிடமும் அப்பாவிடமும் பேசுவதற்கு என்று சிறப்பாக ஒன்றும் இல்லை' என்று தோன்ற ஆரம்பிக்கிறது. அதே வேலை, அதே சூழல், டைம் டேபிள் போட்டுவைத்த மாதிரியான வாழ்க்கை. அப்புறம் எதைப் பேசுவது? எதைப் பகிர்ந்து கொள்வது? பேச்சு குறைய ஆரம்பித்தால், நெருக்கமும் குறைய ஆரம்பிக்கிறது. ஒரு நிலையில் அம்மா, அப்பா அந்நியமாகி விடுகிறார்கள்.

உங்களுக்கே உங்களுக்கு என்று பிடித்த ஒரு விஷயம் இருக்கிறபோது அதை நண்பர்களிடம் மட்டும் அல்ல; குடும்பத்திடமும் பகிர்ந்துகொள்வீர்கள். 'அப்படியா... புதுசா இருக்கே!' என்று நினைக்கலாம். ஒரு சின்ன வாழ்வியல் உதாரணம் - புதிதாகக் குழந்தை பெற்றுள்ள பெண்களைக் கவனித்து இருப்போம். யாரைப் பார்த்தாலும், யாரிடம் பேசினாலும் தன் குழந்தையைப்பற்றியே பேசுவார்கள். அதன் சிரிப்பு, குறும்பு, விளையாட்டு, கண், காது, மூக்கு இப்படி முழுக்க முழுக்க அந்தக் குழந்தைதான் அவர்களுக்கு எல்லாமும். அந்த அம்மாவுக்கு குழந்தையிடம் இருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லை.

உங்களுக்குப் பிடித்தமான விஷயத்தின்மீது அப்படி ஓர் ஈர்ப்பு இருக்க வேண்டும். பணம், புகழ் இது எல்லாவற்றையும் தாண்டி மனநிறை வைத் தருகிற விஷயமாக அது அமைய வேண்டும்.

இனியும், வேலை இல்லாத நேரங்களில் அலுவலகத்தையே சுற்றிக் கொண்டு இருக்காதீர்கள். கல்லூரி கேட்டில் நின்றுகொண்டு யோசிக்காதீர்கள். அம்மா, அப்பாவை வெளியில் கூட்டிக்கொண்டு செல்லுங்கள். அடுக்களையில் அம்மாவுக்கு உதவியாக ஒருநாள் முழுவதும் செலவிடுங்கள். பழைய பள்ளிக்கூடத்துக்குப் போய் ஆசிரியர்களைச் சந்தியுங்கள். உங்கள் ஏரியா சிறுவர்களோடு கிரிக்கெட் விளையாடுங்கள். கேமரா வைத்திருந்தால், தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு பக்கத்து கிராமத்தில் படபடக்கும் பட்டாம்பூச்சியைப் படம் எடுங்கள். எதிர்வீட்டு அங்கிளுக்கு பேப்பர் வாசித்துக் காட்டுங்கள். ஊரில் இருந்து வந்திருக்கும் அத்தைக்கு கம்ப்யூட்டர் சொல்லிக்கொடுங்கள். எங்கேயாவது கித்தார் கற்றுக்கொடுக்கிறார்களா எனப் பார்த்து, 'இளைய நிலா பொழிகிறது' கற்றுக்கொள்ளுங்கள்.

வேலையைச் சுற்றியே திரியாதீர் கள். வேறு ஏதேனும் ஒன்றாவது உங்களுக்குப் பிடித்ததைத் தொடர்ந்து செய்யுங்கள். அது உங்கள் வேலையை இன்னும் சிறப்பாகச் செய்ய உதவும். மனசை லேசாக்கும். உறவுகளுக்குள் கலந்துரையாடலை அதிகரிக்கும். மனசை இன்னமும் இயல்பாக்கும்.

அதெல்லாம் சரி... வழக்கமாகச் செய்கிற வேலையைத் தவிர, உங்களுக்குப் பிடித்த விஷயத்தைக் கண்டுபிடித்துவிட்டீர்களா?
முதலில்
அந்த வேலையைத் தொடங்குங்கள்!

இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்! வாழ்த்துகள் !!

source:received through mail